சின்தோக், அக்டோபர்-3, கெடா, சின்தோக்கில் உள்ள வட மலேசியப் பல்கலைக்கழகத்தில் (UUM) பட்டப்படிப்புக்காக பதிந்துகொள்ளும் தம்பியை, மலாக்காவிலிருந்து தனது மோட்டார் சைக்கிளிலேயே ஏற்றிச் சென்ற அண்ணனின் பாசம், வலைத்தளவாசிகளை நெகிழச் செய்துள்ளது.
பழ வியாபாரியான 27 வயது Ee Tai Qing, 2 நாள் பயணமாக தம்பி Ee Tai Zhi-யை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றார்.
மலாக்கா சுங்கை ஊடாங்கில் உள்ள வீட்டிலிருந்து புறப்பட்ட இருவரும், UUM பல்கலைக்கழகம் சென்றடைந்த போது, துணை வேந்தரே அவர்களை எதிர்கொண்டு வரவேற்றார்.
தம்பி Tai Zhi, விருந்தோம்பல் மேலாண்மைத் (Hospitality Management) துறையில் இளங்கலைப் பட்டப்படிப்பை மேற்கொள்ளவிருக்கிறார்.
இவ்வேளையில், தம்பியை பதிந்து விட்டு, அண்ணன் Tai Qing தனது மோட்டார் சைக்கிளில் பாதுகாப்பாக வீடு திரும்பியதை UUM முகநூல் பதிவில் உறுதிபடுத்தியது.
பல்கலைக்கழகப் பதிவுக்காக வழக்கமாக குடும்பமாக கார்களில் போவதே கண்கூடு.
ஆனால் தொலைதூரம் மோட்டார் சைக்கிளிலேயே பயணமான இந்த பாசமலர்களை வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.