
கோத்தா பாரு, ஆகஸ்ட்-11 – கிளந்தான், கெத்தேரேவில் (Ketereh) 35 கிலோ கிராம் எடையிலான கஞ்சா மற்றும் ஒரு கைத்துப்பாக்கி வைத்திருந்ததன் பேரில், ஒரு மருத்துவரின் மனைவியும் அவர்களின் 2 ஆண் மகன்களும் கைதுச் செய்யப்பட்டனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு அவர்களின் பங்களா வீட்டில் போலீஸார் அதிரடிச் சோதனை நடத்திய போது அப்பொருட்கள் சிக்கின.
அதோடு, 16 உயிருள்ள தோட்டாக்களும் BMW, Mercedes Benz உள்ளிட்ட 4 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 420,000 ரிங்கிட்டாகும் என கிளந்தான் போலீஸ் தலைவர் கூறினார்.
கைதான 46 வயது மாது, கெத்தேரேவில் ஒரு பெரிய கிளினிக்கை நடத்தி வரும் 60 வயது மருத்துவரின் மனைவியாவார்.
முறையே 34 மற்றும் 23 வயதிலான அவரின் 2 ஆண் மகன்களும் தங்களின் மாற்றான் தந்தையான மருத்துவருடன் அதே கிளினிக்கில் வேலை செய்கின்றனர்.
2 மகன்களும் போதைப்பொருள் விநியோகம் செய்வது அவர்களின் தாய்க்குத் தெரிந்தே நடந்துள்ளது; சிறுநீர் பரிசோதனையில் இரு மகன்களும் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததும் உறுதிச் செய்யப்பட்டது.
தாய்லாந்திலிருந்து கடத்தி கொண்டு வந்து, அந்த பங்களா வீட்டில் வைத்து, பின்னர் வாடிக்கையாளர்களுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது.
கைதான மூவரும் 7 நாட்கள் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கடத்தல் கும்பலின் தலைவன் 2023-ல் கைதாகி சிறையிலிருக்கும் நிலையில், இந்த 3 பேரும் அந்த சட்டவிரோத நடவடிக்கையை தொடர்ந்து வந்துள்ளது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.