
பஹாங், செப்டம்பர் 18 – கடந்த ஞாயிற்றுக்கிழமை, கேமரன் மலையில், நீண்ட விடுமுறைக்குப் பிறகு ஏற்பட்ட பெரும் போக்குவரத்து நெரிசலின் மத்தியில் சிக்கித் தவித்து, சைரன் மற்றும் விளக்குகளை எரியவிட்டு அவசரமாகச் செல்ல முயன்ற தீயணைப்பு வாகனத்தின் காணொளி வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
அந்தக் குறுகிய சாலையில் வாகனம் செல்வதற்கு போராடியபோது சிலர் இடம் கொடுக்க முயன்றாலும், பல வாகனங்கள் நெரிசல் காரணமாக அசைய முடியாமல் நின்றதால் தீயணைப்பு வாகனம் மிக மெதுவாக முன்னேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இந்த காட்சியை கண்ட நெட்டிசன்கள், அவசர வாகனங்களுக்கு வழிவிடாத ஓட்டுநர்களின் அக்கறையின்மையையும், அதிகாரிகள் போக்குவரத்து மேலாண்மையை மேம்படுத்த வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்டி கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
பொதுநலத்தைச் சற்றும் பேணாத ஓட்டுனர்களை வலைதளவாசிகள் விமர்சித்த அதே வேளை, தீயணைப்பு வாகனங்களுக்கு முன் தீயணைப்புத் வீரர்கள் மோட்டாரில் பயணித்து, கார்களை விலக்க வழிகாட்ட வேண்டும் என்றும் சிலர் கருத்துரைத்து வருகின்றனர்.
இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியதுடன், அவசர சேவைகளுக்கான வழி உரிமையை மதிக்காத ஓட்டுநர்களின் அலட்சியம் மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.