
கோலாலம்பூர், நவம்பர் 20 – இன்று காலை கோலாலம்பூர் ஜாலான் ஈப்போ பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த 79 வயது முதியவர் குப்பை லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார். அச்சம்பவத்தின் காணொளி சமூக வலைதளங்களில் அதிவேகமாக பரவி வருகின்றது.
ஜாலான் ஈப்போவிலிருந்து வந்துக்கொண்டிருந்த முதியவரின் மோட்டார் சைக்கிளுக்கும் அதே திசையில் சென்று கொண்டிருந்த குப்பை லாரிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் இவ்விபத்து ஏற்பட்டதென்று கோலாலம்பூர் போக்குவரத்துத்துறை தலைவர் (JSPT) முகமட் சம்ஸுரி முகமட் ஈசா (Asisten Komisioner Mohd Zamzuri Mohd Isa) தெரிவித்தார்.
இரண்டு வாகனங்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலில் முதியவர் கீழே விழுந்து, லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்நிலையில் 51 வயது மதிக்கத்தக்க லாரி ஓட்டுநருக்கு, எந்தக் காயங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு சாலைப் போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் சாலையில் பயணிப்பவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டது.



