
சட்டத்தை மீறி கட்டப்பட்ட வழிபாட்டு தலங்கள் மீது நடவடிக்கை எடுக்க ஊராட்சி மன்றங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது -பிரதமர் அன்வார்
புத்ராஜெயா, பிப்ரவரி-9,
சட்டத்தை மீறி கட்டப்பட்ட வழிபாட்டு தலப் பகுதிகளை சுமூகமான முறையில் சுத்தப்படுத்த ஊராட்சி மன்றங்களுக்கு அரசாங்கம் அதிகாரம் வழங்கியுள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிரடியாக அறிவித்துள்ளார்.
தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் இன்று பேசிய அவர், வேண்டுமென்றே விதிமுறைகளைப் பின்பற்றாத வழிபாட்டு தலங்களை அரசாங்கம் இனியும் பொறுத்துக் கொள்ளாது என்றார்.
எனவே, அனுமதியில்லாமல் கட்டப்பட்ட வழிபாட்டு தலங்கள் உள்ள பகுதிகளை _“சுத்தப்படுத்த”_ ஊராட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இந்நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தக்கூடும் என அவர் ஒப்புக்கொண்டாலும், சட்ட அமுலாக்கம் அரசாங்கத்தின் பொறுப்பு என சுட்டிக் காட்டினார்.
ஆனால், அதற்காக, கோவில்களை இடிக்கும் பிரச்சாரங்களும் இயக்கங்களும் தவறானவை என்றும் அன்வார் எச்சரித்தார்.
‘சட்டவிரோதமாகக்’ கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான எதிர்ப்பு பேரணி எனக் கூறிக் சம்ரி வினோத் ஒருங்கிணைப்பில் கடந்த வாரம் சிலர் SOGO பேரங்காடியின் முன் ஆர்ப்பாட்டம் செய்ய முனைந்தனர்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக அப்பேரணி தடைச் செய்யப்பட்டு சிலர் கைதானதும் குறிப்பிடத்தக்கது.
மக்கள் தங்கள் கருத்துகளை தாராளமாக வெளிப்படுத்தலாம், ஆனால் சட்டத்தை மீறும் அல்லது இன ஒற்றுமையை பாதிக்கும் செயல்கள் மீது கடும் நடவடிக்கையை எடுக்கப்படுமெனவும் பிரதமர் எச்சரித்தார்.



