
பிரசல்ஸ், நவம்பர்-1,
இணையத்தில் சட்டவிரோதப் பொருட்களை விற்றதன் பேரில், சீனாவைச் சேர்ந்த பிரபல ஷாப்பிங் தளமான Temu மீது ஐரோப்பிய ஒன்றியம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
விலைக் குறைப்பில் Amazon-னுக்கு போட்டியாக இருக்கும் இந்த Temu ஷாப்பிங் தளத்தின் மீதான புகார்கள் அதிகரித்ததால், வியாழன்று முறைப்படி விசாரணைகள் தொடங்கப்பட்டன.
பயனர்களை அடிமையாக்கக்கூடிய வகையிலான Temu ஷாப்பிங் தளத்தின் வடிவமைப்பு, அவர்களின் உடல் மற்றும் மன நலனில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய அபாயங்களும் விசாரிக்கப்படுமென, ஐரோப்பிய ஒன்றியத்தின் சக்திவாய்ந்த டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்பான ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது.
“கோடீஸ்வரரைப் போல ஷாப்பிங் செய்யுங்கள்” என்ற சுலோகத்துடன் வலம் வரும் இச்சேவையானது, கடந்தாண்டு தான் ஐரோப்பியச் சந்தைக்குள் நுழைந்தாலும், குறுகிய காலத்திலேயே ஐரோப்பிய ஒன்றியத்தில் படு பிரபலமடைந்துள்ளது.
அழகுசாதனப் பொருட்கள் முதல் ஆடைகள், தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்பம் என அனைத்தையும், நேரடியாக சீனாவில் இருந்து சுமார் 100 மில்லியன் ஐரோப்பியப் பயனர்களுக்கு Temu விற்பனை செய்கிறது.