Latestமலேசியா

சிக்கலான கோவில் ஆவணப் பிரச்னைக்கு எளிமையான நிற வகைப்படுத்தல் தீர்வா? ராமசாமி விமர்சனம்

சிக்கலான கோவில் ஆவணப் பிரச்னைக்கு எளிமையான நிற வகைப்படுத்தல் தீர்வா? ராமசாமி விமர்சனம்

கோலாலம்பூர், பிப்ரவரி-24,

தேசிய இந்து கோவில் வழிகாட்டிக் குழு அறிவித்துள்ள 4- நிற வகைப்படுத்தல் தீர்வு மிகவும் ‘மென்மையானது’; இது கோவில்களின் உண்மையான வரலாற்று சிக்கல்களை பிரதிபலிக்கவில்லை என, உரிமைக் கட்சியின் தலைவர் பேராசியர் Dr பி. ராமசாமி விமர்சித்துள்ளார்.

இத்திட்டத்தில் பச்சை நிறம் சட்டப்பூர்வமாக பதிவுச் செய்யப்பட்ட கோவில்கள், மஞ்சள் நிறம் தனியார் அல்லது முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான நிலங்களில் gazette செய்யப்படாத கோயில்கள், ஆரஞ்சு நிறம் நில உரிமையாளரின் அனுமதி நிலுவையில் உள்ளவை, சிவப்பு நிறம் எந்த ஆவணமும் இல்லாத கோவில்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வகைப்படுத்தல் நிர்வாக ரீதியாக வேண்டுமானால் ஒரு தெளிவைத் தரலாம், ஆனால் காலனித்துவம், சுதந்திரம், சுதந்திரத்திற்குப் பிந்தைய காலம் ஆகிய வரலாற்றுச் சூழலை பிரதிபலிக்காது என ராமசாமி சுட்டிக் காட்டினார்.

சுதந்திரத்திற்குப் பிறகு நிலம் ஒதுக்கப்படாததால் அல்லது இடமாற்றம் காரணமாக உருவான பல கோவில்கள் ‘சிவப்பு’ வகையில் அடங்கும்.

இதனால் அவை ‘அழியும்’ ஆபத்தில் சிக்கக்கூடும் என அவர் எச்சரித்தார்.

தவிர, இந்த வழிகாட்டிக் குழுவின் தெளிவுத்தன்மை மற்றும் அதற்கு யார் ஆணை -அதிகாரம் கொடுத்தது போன்ற கேள்விகளையும் ராமசாமி முன்வைக்கிறார்.

தற்போதைக்கு, மலேசிய இந்து சங்கம் தவிர, அதன் மற்ற உறுப்பினர்கள் யார் என்பது தெளிவாக இல்லை என்றார் அவர்.

எனவே, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ள அக்குழு, அதற்கு முன்பதாக தேசிய அளவில் ஆலோசனை நடத்த வேண்டும்.

கோவில் விவகாரங்கள் பெரிய அளவிலான கலந்துரையாடல் மூலம் தீர்க்கப்பட வேண்டும்; மாறாக, போகிற போக்கில் சாலை சமிக்ஜை விளக்கு அணுகுமுறையில் அல்ல என, ராமசாமி வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!