
சிங்கப்பூர், செப்டம்பர்-27,
சிங்கப்பூரில் மத உணர்ச்சியை நோகடிக்கும் நோக்கில் மசூதி ஒன்றுக்கு இறைச்சி அடங்கிய பொட்டலத்தை அனுப்பிய சந்தேகத்தில், 61 வயது உள்ளூர் ஆடவர் கைதாகியுள்ளார்.
செப்டம்பர் 24-ஆம் தேதி மாலை 5.20 மணிக்கு வட சிராங்கூன்(Serangoon) வீதியில் உள்ள அல்-இஸ்திகாமா மசூதிக்கு(Al-Istiqamah Mosque Serangoon) மர்ம பொட்டலம் வந்ததாகக் கூறி, சிங்கப்பூர் போலீஸுக்கு முன்னதாக தகவல் கிடைத்தது.
பொட்டலத்தைக் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பியதில், அதிலிருந்தது பன்றி இறைச்சி என தெரிய வந்தது.
இதையடுத்து உடனடி விசாரணையில் இறங்கிய போலீஸ், மசூதி வளாகத்தில் உள்ள CCTV கேமரா பதிவுகளைப் பரிசோதித்தது.
அதன் பலனாக சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு, குற்றவியல் சட்டத்தின் கீழ் இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.
முன்னதாக அச்சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்த சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் கே. ஷண்முகம், இது போல் நெருப்போடு விளையாட வேண்டாம் என அந்நாட்டு மக்களை எச்சரித்தார்.
பல்லின மக்கள் வாழும் அக்குடியரசில் இன-மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் யாரும் நடந்துகொள்ளக் கூடாது என்றும் அவர் நினைவுறுத்தினார்.