Latestமலேசியா

சிறுமியின் மரணத்துக்குக் காரணமான விபத்து: மின்சார வாகன ஓட்டுநர் மீது மூன்று குற்றச்சாட்டுகள்

கோலாலம்பூர், அக்-15-கோலாலம்பூர், Jalan Kuchingங்கில் ஐந்து வயது சிறுமியின் மரணத்துக்குக் காரணமான சாலை விபத்து தொடர்பில், மின்சார வாகன ஓட்டுநர் ஒருவர் மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. எனினும் Raeven Goh எனும் அந்த 24 வயது இளைஞர் தம் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொள்ள மறுத்து விசாரணை கோரினார்.

கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி பிற்பகல் 3.44 மணியளவில், Jalan Kuchingங்கில் நகர மையத்திலிருந்து Segambut நோக்கிச் செல்லும் சாலையில் அவ்விபத்து நிகழ்ந்தது. பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மின்சார வாகனத்தை ஓட்டி, ஐந்து வயது Asiah Ahmad Syahir எனும் சிறுமிக்கு மரணம் விளைவித்ததாக முதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்தில் இருந்து பத்தாண்டுகள் வரை சிறைத் தண்டனையும் 20,000 ரிங்கிட்டில் இருந்து 50,000 ரிங்கிட் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

அதே இடத்திலும் நேரத்திலும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாகவும், விபத்தில் சம்பந்தப்பட்ட பின்னர் வாகனத்தை நிறுத்தாமல் சம்பவ இடத்திலிருந்து சென்றதாகவும் அவர் மீது மேலும் இரு குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.

மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் சேர்த்து 50,000 ரிங்கிட் பிணைத் தொகை விதிக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டது. எனினும் குறைந்த பிணைத் தொகையை நிர்ணயிக்குமாறு கோரப்பட்டதை அடுத்து ஒரு நபர் உத்தரவாதத்துடன் 36,000 ரிங்கிட் பிணையில் அவரை விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும், கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும், வழக்கு முடியும் வரை ஓட்டுநர் உரிமத்தை இடைநிறுத்தவும் உத்தரவிடப்பட்டது. அவ்வழக்கு விசாரணை நவம்பர் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!