ஷா ஆலாம், செப்டம்பர் -15 – சிலாங்கூரில், அண்மையில் போலீஸ் அதிரடி சோதனை நடத்திய, குளோபல் இக்வான் நிறுவனத்தின் கீழ் செயல்படும் சிறார் இல்லங்கள் மூடப்படுகின்றன.
சிலாங்கூர் இஸ்லாமிய சமய மன்றமான Mais அதனை அறிவித்துள்ளது.
குளோபல் இக்வான் நிறுவனத்துக்கும், தடை செய்யப்பட்ட அல்-அர்காம் (Al-Arqam) கும்பலின் போதனைக்கும் தொடர்பிருப்பதாக வீடியோக்கள் வைரலாகியுள்ளதும் அம்முடிவுக்குக் காரணமென Mais அறிக்கையொன்றில் கூறியது.
சிலாங்கூரில் அத்தகையை தவறான மதபோதனையுடன் தொடர்பிருப்பதாகக் கண்டறியப்படும் காப்பகங்கள் அல்லது சமயப் பள்ளிகளின் பதிவு ரத்துச் செயய்யப்பட்டு, அவை மூடப்படும் என்றும் Mais எச்சரித்தது.
இவ்வேளையில், நாடு முழுவதும் குளோபல் இக்வான் நிறுவனத்துடன் தொடர்புப்படுத்தப்படும் மேலும் 39 சிறார் இல்லங்கள் போலீஸ் கண்காணிப்பில் இருக்கின்றன.
அவற்றின் மீதும் நடவடிக்கை எடுக்கும் சாத்தியத்தை மறுப்பதற்கில்லை என தேசியப் போலீஸ் படைத் தலைவர் Tan Sri Razarudin Husain தெரிவித்தார்.
சுமார் 6 மாத கால தீவிர விசாரணையின் அடிப்படையிலேயே, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் முன்னதாக 20 சிறார் இல்லங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
ஓரினப் புணர்ச்சிக்குக் கட்டாயப்படுத்தப்பட்டது, சித்தரவதை செய்யப்பட்டது உள்ளிட்ட கொடுமைகள் நடப்பது அம்பலமானதை அடுத்து, அம்மையங்களைச் சேர்ந்த 402 சிறார்கள் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.