
ஷா ஆலாம், ஜூலை-18 – சிலாங்கூர் மாநிலத்தைக் கைப்பற்றவும், அதன் மூலம் பின்னர் மத்திய அரசைக் கைப்பற்றவும் சில அரசியல் கட்சிகள் சதி செய்வதாக, மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி பரபரப்பான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
DAP கட்சியின் நிதி திரட்டும் நிகழ்வில் பேசிய அமிருடின், பெயர் குறிப்பிடாத இரண்டு அல்லது மூன்று அரசியல் கட்சிகள், சிலாங்கூரில் உள்ள மலாய், சீன மற்றும் இந்தியச் சமூகங்களிடையே இனவாதத்தைத் தூண்டி, தேவையற்ற பயத்தையும் பதற்றத்தையும் உருவாக்கி வருவதாகக் கூறினார்.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகக் கடின உழைப்பால் கட்டிக் காக்கப்பட்ட சிலாங்கூரின் வளர்ச்சியையும், அரசியல் நிலைத்தன்மையையும் சீர்குலைக்கவே இத்தகைய ஆபத்தான அரசியல் விளையாட்டுகள் நடத்தப்படுவதாகவும் அவர் எச்சரித்தார்.
மத மற்றும் இனவாத அடிப்படையிலான தீவிர அரசியலை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றும், நாட்டின் அமைதியையும் ஒற்றுமையையும் பாதுகாக்க ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த 2023 மாநிலத் தேர்தலில் சிலாங்கூரில் மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டாலும், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அங்கு தனது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை இழந்தது குறிப்பிடத்தக்கது.



