
சுங்கை பட்டாணி, பிப்ரவரி-16 – கெடா, சுங்கை பட்டாணியில் திடீரென ஆவேசமடைந்து வெறித்தனமாக நடந்துகொண்ட ஆடவரைப் பிடிக்கும் முயற்சியில், 4 போலீஸ்காரர்கள் காயமடைந்தனர்.
தாமான் ஸ்ரீ உத்தாமாவில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
தகவல் கிடைத்து போலீஸ் வந்த போது, வெளியில் பூட்டிய வீட்டில் 32 வயது அவ்வாடவர் இருந்துள்ளார்.
அவரைப் போலீஸார் பிடிக்க முயன்ற போது, கையிலிருந்த பாராங் கத்தியை சுழற்றியதால், போலீஸாரும் தற்காப்புக்காக துப்பாக்கிச் சூட்டை கிளப்ப வேண்டியதாயிற்று.
பாராங் கத்தி பட்டதில், 30 முதல் 50 வயதிலான 4 போலீஸ்காரர்களும் தலை, கை, தோள் பட்டை மற்றும் இடுப்பில் காயமடைந்தனர்.
இருவர் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய வேளை, மேலுமிருவர் சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு பட்ட சந்தேக நபர், சனிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு மரணமடைந்ததாக, குவாலா கெடா போலீஸ் தலைவர் துணை ஆணையர் Wan Azharuddin Wan Ismail கூறினார்.
என்றாலும் கொலை முயற்சி என்ற அடிப்படையில் அச்சம்பவம் விசாரிக்கப்படுமென்றார் அவர்.
இவ்வேளையில் கையில் பாராங் கத்தியுடன் அவ்வாடவர் 2 போலீஸ்காரர்களை விரட்டுவதை கண்டதாக, அண்டை வீட்டார் ஒருவர் கூறினார்.
எப்போதும் அமைதியாகவும் அக்கம் பக்கத்தாருடன் அதிகம் பேசாதவர் என்றும் அறியப்பட்ட அவ்வாடவரின் திடீர் வெறிச் செயல் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.