
கோலாலம்பூர், மார்ச்-13 – பினாங்கு சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி கட்டுமானம் தொடர்பான தனது கடப்பாட்டை கல்வி அமைச்சு மறு உறுதிப்படுத்தியுள்ளது.
என்ன நடந்தாலும் அத்தமிழ்ப்பள்ளி கட்டப்பட்டே ஆக வேண்டும்.
ஆனால் தற்போது பள்ளியின் நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.
வழக்கு சீக்கிரமே முடிவுக்கு வந்து தீர்ப்பு வருமென தாம் எதிர்பார்ப்பதாக, கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் கூறினார்.
அதே சமயம், பள்ளி நிர்மாணிப்புப் பணிகள் குறித்து நிதி அமைச்சுடன் தமதமைச்சு கலந்தாய்வு நடத்தியிருப்பதாகவும் அவர் சொன்னார்.
எனவே சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியைக் கட்டும் வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றப்படுமென, நிபோங் திபால் நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபாட்லீனா கூறினார்.
சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி மேம்பாட்டின் தற்போதைய நிலை குறித்து மேலவையில் செனட்டர் Dr லிங்கேஷ்வரன் எழுப்பிய கேள்விக்கு ஃபாட்லீனா பதிலளித்தார்.
அமைச்சரின் பதிலை வரவேற்ற லிங்கேஷ், அத்தகவலை பள்ளி மேலாளர் வாரியத்திற்கும் தலைமையாசிரியருக்கும் அமைச்சு தெரியப்படுத்தினால் இன்னும் நலம் என்றார்.
ஃபாட்லீனா தொகுதிக்குட்பட்ட இந்த சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியின் கட்டுமானம், நிலம், கடன் உள்ளிட்ட விவகாரங்களால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் உள்ளது.
அவற்றைத் தீர்க்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு என ஏற்கனவே கூறியிருந்த ஃபாட்லீனா, நிபோங் தெபால் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், அப்பள்ளியின் கட்டுமானத்துக்கு தமது பங்குக்கு 50,000 ரிங்கிட் நிதியை வழங்குவதாகவும் அறிவித்திருந்தார்.
சுங்கைப் பாக்காப் தமிழ்ப்பள்ளி கட்டப்பட வேண்டிய கடப்பாட்டை, துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடியும் ஏற்கனவே உறுதிப்படுத்தியிருந்தார்.