
சுபாங் ஜெயா, மார்ச்-17 – சிலாங்கூர், சுபாங் ஜெயா, USJ 6-ல் உள்ள சில வீடுகளில் சுவரேறி குதித்து வாகனங்களில் கைவரிசைக் காட்டிய ஆடவன் வைரலாகியுள்ளான்.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஒரு வீட்டில் அத்துமீறிய அவ்வாடவன், காரின் கதவைத் திறந்து, திருடுவதற்காக பொருட்களை ஆராய்வது CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.
பூட்டப்படாத காரைத் திறந்து 20 ரிங்கிட்டுடன் அவன் கம்பி நீட்டியதாக, வீட்டின் உரிமையாளர் போலீஸில் புகார் செய்துள்ளார்.
அங்கிருந்து 300 மீட்டர் தொலைவிலிருக்கும் இன்னொரு வீட்டிலும் அத்திருடன் சுவரேறி குதித்திருப்பதாக, சுபாங் ஜெயா போலீஸ் தலைவர் துணை ஆணையர் வான் அஸ்லான் வான் மாமாட் கூறினார்.
திருட்டு மற்றும் அத்துமீறல் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட ஏதுவாக அவன் தேடப்படுகிறான்.
எனவே, தகவல் தெரிந்தோர் சுபாங் ஜெயா போலீஸை தொடர்புக் கொள்ளுமாறும் வான் அஸ்லான் கேட்டுக் கொண்டார்.