
ஜோகூர் பாரு, ஜுன்-23 – கடந்த 6 மாதங்களாக போதைப் பொருள் உலகின் ‘தாதா’வாக வலம் வரும் முயற்சியில் ஈடுபட்டிருந்த 45 வயது ஆடவர், ஜோகூர் பாரு, முத்தியாரா ரினியில் போலீஸிடம் சிக்கினார்.
ஜூன் 14, 15-ஆம் தேதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 6.87 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் 42 கிலோ கிராம் எடையிலான போதைப் பொருளுடன் அவர் கைதானார்.
அவ்வாடவரின் உதவியாளர் என நம்பப்படும் 2 வியட்நாமிய பெண்களும் கைதானதை, ஜோகூர் போலீஸ் தலைவர் டத்தோ எம். குமார் உறுதிப்படுத்தினார்.
இரண்டு 2 மாடி டேரஸ் வீட்டுகளை வாடகைக்கு எடுத்து இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து அவர்கள் செயல்பட்டு வந்துள்ளனர்.
போதைப் பொருட்களைத் தயாரித்து, பொட்டலமிட்டு, சேமித்து வைக்குமிடமாக அவ்வீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பறிமுதல் ஆன போதைப் பொருட்கள், 146,195 போதைப் பித்தர்களுக்குப் பிரித்துக் கொடுக்கும் அளவுக்கு பெரியதாகும் என குமார் சொன்னார்.
போதைப் பொருட்களை சொந்தமாகத் தயாரித்து 30 கிராம் முதல் 100 கிராம் வரையிலான எடையில் சிறு சிறு பேக்கேட்டுகளாக பொட்டலமிட்டு, உள்ளூர் சந்தைகளில் 250 முதல் 350 ரிங்கிட் வரையில் அவர்கள் விற்று வந்துள்ளனர்.
போதைப் பொருட்களை விளம்பரப்படுத்த சமூக ஊடகங்களை அவர்கள் பயன்படுத்தியதும் தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
மூவரும் வியாழக்கிழமை வரை விசாரணைகளுக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.