
சுபாங் ஜெயா , மே-26-சௌஜானா பூச்சோங்கில் புரோட்டான் X70 வாகனம் சம்பந்தப்பட்ட திருட்டுச் சம்பவம் குறித்த பொதுப் புகாரை பெற்றதைத் தொடர்ந்து மேற்கொண்ட நடவடிக்கையில் 3.85 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருளைக் போலீசார் பறிமுதல் செய்ததோடு உள்நாட்டைச் சேர்ந்த இரு ஆடவர்களையும் கைது செய்தனர்.
வாகனத்தில் புகுந்து திருட முயன்றதாகக் கூறப்படும் நபர்கள் குறித்த தகவல் மே 13ஆம் தேதியன்று புக்கிட் பூச்சோங் போலீஸ் நிலைய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உடனடி நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசார் அந்த வாகனத்தின் உள்ளேயோ அல்லது அருகிலோ யாரும் இல்லை என்பதைக் கண்டறிந்தனர்.
எனினும் பின்புறப் பயணிகள் இருக்கைப் பகுதி மற்றும் போனட் பகுதியை மேலும் ஆய்வு செய்ததில், 174,909 கிராம் எடையுள்ள, ஷாபு போதைப்பொருள் அடங்கிய 172 பொட்டலங்கள் கொண்ட ஒன்பது பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக சுபாங் ஜெயா போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் வான் அஸ்லான் வான் மமாட் தெரிவித்தார்.
1988 ஆம் ஆண்டின் அபாயகரமான போதைப்பொருள் (சொத்து பறிமுதல்) சட்டத்தின் கீழ், 30,000 ரிங்கிட் மதிப்புள்ள ஒரு மினி கூப்பர் காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
வாகனம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு, மே 14 ஆம் தேதியன்று பெட்டாலிங் ஜெயா மற்றும் கோம்பாக்கில் சம்பந்தப்பட்ட இரு சந்தேகப் பேர்வழிகளை கைது செய்தனர்.



