
கோலாலம்பூர், மே 7 – ஜாலான் கிளாங் லாமாவில் Dim Sum உணவகத்தில்
மேசைகளைக் கவிழ்த்து, உணவருந்த வந்தவர்களை பீதியில் தப்பி ஓடச் செய்து, குழப்பம் மற்றும் கலவரத்தை ஏற்படுத்தியதாக நம்பப்படும் நைஜீரிய ஆடவனை போலீசார் தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் மே 5 ஆம்தேதி காலை மணி 11க்கு உணவகத்தின் உரிமையாளர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததாக பிரிக்பீல்ட்ஸ் போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் ஹோ சாங் ஹூக் (Hoo Chang Hook) தெரிவித்தார்.
சேதத்தை ஏற்படுத்தியது தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 427 ஆவது விதியின் கீழ் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சந்தேக நபர் போதையில் இருந்ததாக நம்பப்படுகிறது. அந்த உணவகத்தில் நடைபெற்ற முழு சம்பவமும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியிருப்பதாக Hoo தெரிவித்தார்.
@My_CrimeWatch என்பவரால் X தளத்தில் பதிவேற்றப்பட்ட ஒரு காணொளியில், வெளிநாட்டவர் என்று நம்பப்படும் ஒருவர், மேசைகளைப் புரட்டிப் போட்டு உணவகத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்துவது காட்டப்பட்டது.
மே 5 ஆம் தேதி இரவு பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் அந்தக் காணொளியில், உணவருந்த வந்தவர்கள் கத்தியபோதிலும் அந்த நபர் சற்றும் கலங்காமல் இருப்பதை காணமுடிந்தது.
அதோடு பல வாடிக்கையாளர்கள் வீசிய பிளாஸ்டிக் நாற்காலிகளால் அவர் தாக்குதலுக்கு உள்ளானபோதிலும் , தொடர்ந்து மேசைகளைப் புரட்டி, உணவு மற்றும் பானங்களைத் அந்த ஆடவர் தரையில் கொட்டினார்.



