Latestமலேசியா

ஜூலை முதல் நாடு முழுவதும் ஒரே சீரான விலை: மானிய டீசல் RM2.10-தாகக் குறைகிறது – பிரதமர் அன்வார் அறிவிப்பு

புத்ராஜெயா, ஜூன்-22-ஜூலை முதல் நாடு முழுவதும் தகுதிப் பெற்ற மலேசியர்களுக்கு மானிய விலையிலான டீசல் லிட்டருக்கு 2 ரிங்கிட் 10 சென்னுக்கு விற்பனை செய்யப்படும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

மலேசியர்களுக்கு மட்டுமே இந்த மானிய பலன்கள் நேரடியாகச் சென்றடைவதை உறுதிச் செய்யும் நோக்கில், நாடு தழுவிய அளவில் டீசல் மானிய முறை சீரமைக்கப்படவுள்ளது.

​இதன் கீழ், தகுதியுள்ள உள்நாட்டுப் பயனர்கள் தங்களுடைய MyKad அடையாள அட்டையைச் சரிபார்ப்பதன் மூலம், புதிய விலையான 2 ரிங்கிட் 10 சென்னுக்கு டீசலைப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்தத் திட்டம் ஏற்கனவே அமுலில் உள்ள BUDI95 முறையைப் போன்றதாகும்.

​தற்போது சபா மற்றும் சரவாக்கில் 2 ரிங்கிட் 15 சென்னுக்கு விற்கப்படும் மானிய டீசல் விலை, புதிய அறிவிப்பின்படி 5 சென் குறைக்கப்பட்டு, தீபகற்ப மலேசியாவுடன் ஒரே சீராக இணையும்.

எனினும், வெளிநாட்டினருக்கும் தகுதியற்ற தரப்பினருக்கும் மானிய விலையிலான டீசல் வழங்கப்பட மாட்டாது; அவர்கள் சந்தை விலையிலேயே வாங்க வேண்டும்.

​உலகளாவிய எண்ணெய் விநியோக நெருக்கடிக்கு மத்தியில், மானியங்கள் முறைகேடாகக் கடத்தப்படுவதைத் தடுக்கவும், நாட்டின் பொருளாதார சீர்திருத்தங்களின் பலனை நேரடியாக மக்களுக்கே கொண்டு சேர்க்கவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சருமான அன்வார் விளக்கினார்.

இதன் அமுலாக்கம் குறித்த கூடுதல் விவரங்களை இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்ஸா அசிசான் நாளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!