
மாரான், செப்டம்பர்-10,பஹாங், மாரான், பண்டார் ஜெங்கா மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் பிரிவு மற்றும் பெண்கள் பிரிவின் மேற்கூரையில் நேற்றிரவு சுமார் 7 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில் 17 நோயாளிகள் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் எதுவுமின்றி தப்பினர்.
இந்தச் சம்பவத்தில் இரு வார்டுகளின் மேற்கூரை மற்றும் மின் கம்பி இணைப்புகள் சுமார் 10 விழுக்காடு சேதமடைந்ததாக
மாரான் மாவட்டப் போலீஸ் தலைவர் வோங் கிம் வாய் கூறினார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த 11 குழந்தைகள் மற்றும் 6 பெண்கள் உட்பட மொத்தம் 17 நோயாளிகளும் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டதால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பஹாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு, சுமார் 20 நிமிடங்களில் தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்துக்கான சரியான காரணம் மற்றும் சேத மதிப்பு குறித்து தீயணைப்புப் படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



