
ஜெலபு, ஜூலை-8 – நெகிரி செம்பிலான், ஜெலபு, குவாலா கிளாவாங்கில் மாற்றுத்திறனளியான தனது 13 வயது வளர்ப்பு மகனை சித்ரவதை செய்த சந்தேகத்தின் பேரில் குடும்ப மாது கைதாகியுள்ளார்.
சமூக நலத்துறை செய்த புகாரைத் தொடர்ந்து ஜூன் 16-ஆம் தேதி 35 வயது அப்பெண் கைதானதாக, மாவட்ட போலீஸ் கூறியது.
அவருக்கு 5 வயது பிள்ளை, 7 மாத குழந்தை என 2 சொந்த பிள்ளைகளும் உள்ளனர்.
இந்நிலையில் ADHD என்ற ஒருவகை நரம்பியல் வளர்ச்சி கோளாறால் பாதிக்கப்பட்ட அந்த முதலாம் படிவ மாணவன், 6 வயதிலிருந்தே அம்மாதுவின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளான்.
தாமதமாக வந்தாலோ, கட்டளைகளைப் பின்பற்றத் தவறினாலோ தன்னை அம்மாது அடிப்பார் என்றும், அடிக்கடி கத்தி, திட்டியதோடு, துணி மாட்டும் hanger கருவிகள் போன்ற பொருட்களால் தன்னைத் தாக்கியதாகவும் அவன் போலீஸாரிடம் கூறியுள்ளான்.
கடைசியாக ஜூன் 14-ஆம் தேதி பள்ளி விளையாட்டு தினத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது, உலோகக் குழாயால் தாக்கப்பட்டதாகவும், இதனால் முழங்கை, மணிக்கட்டு மற்றும் முதுகு உட்பட உடலின் பல பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டதாகவும் அச்சிறுவன் தெரிவித்தான்.
அந்த வீட்டில் குழந்தை சித்ரவதை நடப்பதாக ஒரு பெண் புகார் அளித்து மின்னஞ்சல் அனுப்பியதைத் தொடர்ந்து, சமூக நலத் துறையால் சிறுவன் மீட்கப்பட்டான்.
பரிசோதனைக்காக ஜெலபு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதில், அவனது காயங்கள் ஒரு மழுங்கிய கம்பி வடிவ பொருளால் ஏற்பட்டதாகவும், பரிசோதனைக்கு 3 நாட்களுக்கு முன்பு அது ஏற்பட்டதாக நம்பப்படுவதாகவும் உறுதிப்படுத்தப்பட்டது.