
ஜெலுபு, ஏப்-3-ஜெலுபு , kampung Lakai-க்கு அருகேயுள்ள சுங்கை மரோங் ஆற்றில் மாசுபாடு காரணமாக ஆற்று நீர் கருமையாகவும் நுரை நிறைந்தும் மாறியதால் பல மீன் இனங்கள் இறந்துள்ளன.
இது குறித்து மீன்வளத் துறை விசாரணை நடத்தும் என்பதோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்வதற்கு வழிவகுத்தது.
உள்ளூர் மீனவர்களிடமிருந்து மாசுபாடு குறித்து புகார் கிடைத்துள்ளதாக ஜெலுபு மீன்வளத் தலைவர் முகமட் அசார் ஜூசோ ( Mohd Azhar Jusoh ) தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து புகார்தாரருடன் சம்பவ இடத்திற்குச் சென்று, அவர் கூறியது உண்மையே என்பதை கண்டறியப்பட்டது.
சில மீன்கள் நீரின் மேற்பரப்பில் காணப்பட்டன, மற்றவை ஏற்கனவே இறந்துவிட்டன. பின்னர், மாநில மீன்வளத் துறையின் உயிரியல் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டதாக முகமட் அசார் கூறினார்.
ஆற்றில் கரைந்துள்ள ஆக்ஸிஜனின் அளவு குறைவாக இருந்ததே மீன்கள் மூச்சுத்திணறி இறப்பதற்குக் காரணம் என்று அவர் கூறினார்.
ஆற்றின் நிலை மேம்படவில்லை என்றால், குறிப்பாக மழை பெய்யவில்லை என்றால், இன்னும் பல மீன்கள் இறக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
இறப்புகளுக்கான சரியான காரணத்தைக் கண்டறிவதற்காக, நீர் மற்றும் மீன் மாதிரிகள் எடுக்கப்பட்டு, மீன்வள உயிரியல் பாதுகாப்பு ஆய்வகத்திற்கு அனுப்பப்படும் என்றும் முமட் அசார் தெரிவித்தார்.



