Latestமலேசியா

ஜோகூர் தேர்தலில் பாரிசான் நேஷனல் அமோக வெற்றி; வாழ்த்துகளுடன் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து முன்னோக்கிச் செல்ல பிரதமர் அன்வார் அழைப்பு

கோலாலாம்பூர், ஜூலை-12 – நேற்றைய ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாரிசான் நேஷனல் (BN) கூட்டணி அமோக வெற்றிப் பெற்றதற்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் நிலவும் அரசியல் நிலைத்தன்மைக்கு வாக்காளர்கள் வழங்கிய அங்கீகாரத்தையே இந்தத் தேர்தல் முடிவு பிரதிபலிப்பதாக, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவருமான அன்வார் குறிப்பிட்டார்.

அரசியல் அரங்கில் எட்டப்பட்டுள்ள இந்த நிலைத்தன்மை, நாட்டின் பொருளாதாரச் சீர்திருத்தங்களை வேகப்படுத்தவும் மக்களின் நலன்களைப் பாதுகாக்கவும் நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதால், அரசாங்கத்தின் முழுக் கவனமும் இப்போது பொருளாதார மேம்பாட்டிலேயே இருக்கும்
என்றும் அவர் விவரித்தார்.

இந்நிலையில், அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்ல வேண்டிய தருணம் இது என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

பெரும் பரபரப்புக்கு மத்தியில் நடைபெற்று முடிந்த ஜோகூர் தேர்தலில், போட்டியிட்ட 56 தொகுதிகளில் 48 இடங்களைக் கைப்பற்றி பாரிசான் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது; 2022 தேர்தலில் வாங்கிய இடங்களை விட இது 8 கூடுதலாகும்.

அதே சமயம், பக்காத்தான் ஹராப்பானோ, வெறும் எட்டே இடங்களில் வெற்றிப் பெற்று படுதோல்வியைச் சந்தித்துள்ளது; கடந்த முறை அக்கூட்டணி 13 இடங்களை வென்றிருந்தது.

இம்முறை வென்ற 8 இடங்களில் 6 இடங்கள் DAP வென்றவையாகும்.

இவ்வேளையில், பாரிசான் வென்ற 48 இடங்களில் 4 இடங்கள் ம.இ.கா வேட்பாளர்கள் வென்றவையாகும்.

கெமளாவில் ரவின் குமார் கிருஷ்ணசாமி, கஹாங்கில் V. ருகேந்திரன், புக்கிட் பத்துவில் R. குமரன் வென்ற வேளை, DAP-யின் கோட்டையாக விளங்கிய பெர்லிங் சட்டமன்றத்தில் பன்னீர் செல்வம் வெற்றிப் பெற்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்தியர்களின் வாக்குகள் ம.இ.காவுக்குத் திரும்பியிருப்பதை இது காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

DAP-யின் கார்த்தியாயினி ஜெயபாலன் ஸ்கூடாய் தொகுதியில் வெற்றிப் பெற்றிருப்பதால், ம.இ.கா வேட்பாளர்களையும் சேர்ந்து இம்முறை மொத்தமாக 5 இந்தியர்கள் ஜோகூர் சட்டமன்றத்திற்குள் நுழைகின்றனர்.

பாரிசானின் மற்றோர் உறுப்புக் கட்சியான ம.சீ.சவுக்கும் ஏறுமுகமே; அதுவும் DAP வென்ற 6 இடங்களை விட அதிகமாக MCA 8 இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளது.

பெரிக்காத்தான் போட்டியிட்ட அனைத்து 33 தொகுதிகளிலும், டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லியின் பெர்சாமா கட்சி போட்டியிட்ட 15 தொகுதிகளிலும் படுதோல்வியைச் சந்தித்துள்ளன; மற்ற சிறு சிறு கட்சிகளுக்கும் இதே நிலைமை தான்.

ஜோகூரில் பரவியுள்ள பாரிசானின் நீல நிற அலை, அடுத்து நெகிரி செம்பிலான் தேர்தலிலும் தொடருமா என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்….

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!