
ஜோர்ஜ்டவுன், மார்ச்-10-டிக் டோக் நேரலை வீடியோவில் மிரட்டும், அவமதிக்கும் மற்றும் இனவாதத்தை தூண்டும் வகையிலான கருத்துகளை வெளியிட்ட புகாரின் பேரில், சர்ச்சைக்குரிய சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத்தை பினாங்கு போலீஸ் விசாரித்து வருகிறது.
மார்ச் 8 ஆம் தேதி பெறப்பட்ட போலீஸ் புகார் அடிப்படையில் விசாரணை அறிக்கைத் திறக்கப்பட்டுள்ளதாக, மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிசீ இஸ்மாயில் தெரிவித்தார்.
தேச நிந்தனை, சமூக அமைதியை குலைக்கும் நோக்கில் அவமதிப்பு, மற்றும் தவறான இணையப் பயன்பாடு ஆகிய சட்டங்களின் கீழ் விசாரணை நடைபெறுகிறது.
இந்நிலையில், பொது மக்கள் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை அல்லது சினமூட்டும் உள்ளடக்கங்களை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இது இன ஒற்றுமையை பாதிக்கக்கூடும் என அவர் வலியுறுத்தினார்.



