
மலாக்கா, ஜூலை-18 – மலாக்காவில் சிறைக்குள் ட்ரோனைப் பயன்படுத்தி புகையிலையைக் கடத்த முயன்ற தம்பதி போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
புதன்கிழமை மதியம் சுங்கை ஊடாங் சிறைச்சாலைக்கு வெளியே சந்தேகத்திற்குரிய வகையில் ட்ரோன் பறப்பதைக் கண்ட சிறைக் காவலர்கள், உடனடியாக போலீஸிஸ் புகாரளித்தனர்.
இதனைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கியப் போலீஸார், அதே நாள் மாலை 4 மணியளவில் Taman Kris Satria-வில் உள்ள வீட்டொன்றில் சோதனை நடத்தி அத்தம்பதியை மடக்கிப் பிடித்தனர்.
இருவரும் முறையே 49 மற்றும் 27 வயது உள்ளூர் பிரஜைகள் ஆவர்.
சோதனையில், அந்த ட்ரோனுடன் சிறிய பொட்டலங்களில் புகையிலைப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சிறையில் உள்ள கைதிகளுக்கு இந்தத் தடைசெய்யப்பட்ட பொருட்களை விநியோகிப்பதற்காக, ட்ரோன் மூலம் சிறை வளாகத்திற்குள் அவற்றை அனுப்ப அவர்கள் திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்களுடன் தொடர்பிலிருந்த கைதி யார் என்பதை அடையாளம் காணும் பணிகளும் தீவிரமடைந்துள்ளன.
கைதுச் செய்யப்பட்ட தம்பதி மீது போதைப்பொருள் மற்றும் சிறைச்சாலை விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவுச் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆண் சந்தேக நபருக்கு 3 போதைப்பொருள் குற்றங்கள் உட்பட ஏற்கனவே 12 குற்றப்பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சிறைச்சாலை வளாகங்களில் ட்ரோன் மூலம் இத்தகைய சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.



