
பெட்டாலிங் ஜெயா, மார்ச-20-தமிழுக்கும் தமிழ்த் தொண்டுக்கும் பெருமைசேர்க்கும் விதமாக நாட்டில் முதன் முறையாக தமிழ்க் கல்வியாளர்களைக் கௌரவிக்கும் வகையில் விருது விழாவொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
TAGAMAI எனப்படும் தமிழ்க் கல்வி ஆளுமை இயக்கம், இந்த தமிழ்க் கல்வி விருதளிப்பு விழாவை வரும் செப்டம்பர் 20-ஆம் தேதி நடத்துகிறது.
வணக்கம் மலேசியா இந்த விருது விழாவின் அதிகாரப்பூர்வ ஊடக ஆதரவாளராகும்.
இந்த விழா திட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர்களாக மூத்த கல்விமான்களான டத்தோ Dr என். எஸ். ராஜேந்திரன் மற்றும் Dr கே. நாகலிங்கம் செயல்படுகின்றனர்.
இந்த விழாவின் முக்கிய நோக்கமே, மலேசியாவில் தமிழ்க் கல்வி மற்றும் தமிழ்மொழிக்காகப் பணியாற்றிய கல்வியாளர்கள், சமூக ஆர்வாலர்கள், மற்றும் தமிழ்த் தொண்டர்களைக் கௌரவிப்பதாகும்.
தன்னார்வ அடிப்படையில் நடத்தப்படும் இம்முயற்சியின் முக்கிய அம்சங்கள் குறித்து, விழா ஏற்பாட்டுக் குழுத் தலைவர் Dr என்.எஸ்.ராஜேந்திரன், சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
கலைஞர்களுக்கு வழங்கப்படும் பாராட்டைப் போல கல்வியாளர்களுக்கும் வழங்க வேண்டும் என, விழாக் குழு செயலாளர் C.M. திரவியம் தெரிவித்தார்.
தமிழ்ப் பள்ளியின் சிறந்த தலைமைத்துவ விருது, தமிழ்ப் பள்ளியின் சிறந்த ஆசிரியர் விருது, சிறந்த தமிழ்மொழி ஆசிரியர் விருது, சிறந்த இடைநிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் விருது, சிறந்த கல்லூரி/பல்கலைக்கழக தமிழ் விரிவுரையாளர் விருது, தமிழ்க் கல்வி வாழ்நாள் சாதனையாளர் விருது, தமிழ் மொழி/தமிழ்க் கல்வி வளர்ச்சிக்கான சிறப்பு விருது ஆகிய 7 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன.
ஒவ்வொரு பிரிவிலும் எத்தனைப் பேரை வேண்டுமானாலும் பரிந்துரைக்கலாம்; ஆனால் ஒருவருக்குத் தான் விருது வழங்கப்படும்.
ஒவ்வொரு விருதுக்கும் பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப் பணம் பரிசாக வழங்கப்படும்.
விருதுகளுக்கான பரிந்துரைகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் எதிர்வரும் ஜூன் மாதம் 30-ஆம் தேதியாகும்.
ஏறக்குறைய 3 மாத கால அவகாசம் இருப்பதால், விருதுகளுக்குத் தகுதியானவர்கள் என நீங்கள் நினைப்பவர்களை தக்க ஆவணங்களுடன் அனுப்ப உங்களுக்கு வாய்ப்பு உள்ளது.
www.tagamai.com/home என்ற இணையத் தள முகவரியில் விருதுகளுக்கான பரிந்துரைகளை அனுப்பலாம்;உங்களுக்கு தெரிந்தவர்களையும் விருதுகளுக்கான முன்மொழிவுகளை அனுப்ப ஊக்குவியுங்கள்.
தமிழ்ப் பள்ளி மாணவர் சேர்க்கை சரிவையும், பெற்றோரின் எதிர்மறை கருத்துகளையும் மாற்றி, தமிழ்ப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதும் இந்த முயற்சியின் நோக்கமாகும்.
எனவே, இந்நிகழ்ச்சிக்கு நாம் கொடுக்கப் போகும் ஆதரவு, தமிழுக்கு நாம் செய்யும் தொண்டாகும்.



