
புத்ராஜெயா, ஜனவரி 22 – 2019-ஆம் ஆண்டு கிள்ளானில், மலேசிய கடலோர அமலாக்க முகமையான APMM-யின் தடுப்புக் காவலில் இருந்தபோது பாதுகாப்பு காவலர் எம். தினகரன் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அரசு அதற்கு பொறுப்பல்ல என மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு, அரசின் மேல்முறையீட்டை ஏற்று, தினகரனின் குடும்பத்திற்கு 194,170 ரிங்கிட் இழப்பீட்டை வழங்க உத்தரவிட்ட உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்தது. மேலும், அரசு, சிலாங்கூர் APMM இயக்குநர் மற்றும் விசாரணை அதிகாரிகள் காவலில் இருந்தவரின் மரணத்திற்கு பொறுப்பு இல்லை எனவும் கூறியது.
தடுப்புக் காவலில் இருப்பவரின் பாதுகாப்பை உறுதி செய்வது அதிகாரிகளின் பொறுப்பு என்றாலும், இந்த வழக்கில் தினகரன் தற்கொலை செய்யக்கூடும் என்பதை முன்கூட்டியே யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று நீதிபதி தீர்ப்பின் போது குறிப்பிட்டிருந்தார். அதே நேரத்தில், மருத்துவ பரிசோதனைகளிலும் அவர் உடல் மற்றும் மன ரீதியாக சீரான நிலையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனால், பொறுப்பை நிர்ணயிக்க முக்கியமான ‘முன்கணிப்பு அபாயம்’ (foreseeability) நிரூபிக்கப்படவில்லை என்றும் நீதிமன்றம் கூறியது. தினகரனின் குடும்பம் தாக்கல் செய்த எதிர்முறையீடும் நிராகரிக்கப்பட்ட நிலையில் மேல்முறையீட்டாளர்களுக்கு 40,000 ரிங்கிட் செலவுத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.
கடந்த 2019 ஆம் ஆண்டு, சந்தேகத்திற்கிடமான கப்பலை சோதனையிட்ட APMM அதிகாரிகள், தினகரன் மற்றும் மற்றொரு நபரை கைது செய்தனர். பின்னர், தினகரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நான்கு நாட்களுக்குப் பிறகு அவர் தற்கொலை செய்து கொண்டார் என சவப்பரிசோதனை உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.



