
சென்னை, அக்டோபர்-5 – தமிழ் திரையுலகின் முதல் திருநங்கை இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார் சம்யுக்தா விஜயன்.
அவரே இயக்கி அவரே கதாநாயகியாக நடித்துள்ள நீல நிற சூரியன் படம் வெள்ளிக்கிழமை வெளியானது.
மாற்று பாலினத்தவரின் பயணம் குறித்த அப்படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருவது அவருக்கு உற்சாகத்தை ஊட்டியுள்ளது.
நகைச்சுவை என்ற பெயரில் திரைப்படங்களில் மூன்றாம் பாலினத்தவர்கள் மோசமாக சித்தரிக்கப்படுவதால் ஏற்பட்ட விரக்தியே, தன்னை இயக்குநராகத் தூண்டியதாக சம்யுக்தா கூறினார்.
சினிமாவின் மீதான காதலால் அமேசான் போன்ற பெருநிறுவனத்திலிருந்த வேலையை விட்டு விட்டு, இயக்கத்தில் இறங்கியுள்ளார்.
அவரின் முயற்சி வீண் போகவில்லை.
நீல நிற சூரியன் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வருவதோடு, சமூக ஊடகங்களில் அவருக்குப் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
திரைத்துறை போன்ற சவால் மிக்க துறைகளில் திருநங்கைகளாலும் சாதிக்க முடியும் என்பதற்கு சம்யுக்தா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.