கோத்தா பாரு, டிசம்பர்-24 – கிளந்தான் தானா மேராவில் நடைபெற்ற சுரங்க நிறுவனத்தின் இரவு விருந்து நிகழ்வில், அரைகுறை ஆடையுடன் பெண்ணொருவரை கவர்ச்சி நடனமாட அனுமதித்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு, 10,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசின் 1998-ஆம் ஆண்டு பொழுதுபோக்கு மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் அந்த அபராதம் விதிக்கப்பட்டது.
ஏற்பாட்டாளர்கள் இன்று அபராதத் தொகையைச் செலுத்தினர்.
வீடமைப்பு-ஊராட்சி மன்றம், சுகாதாரம் மற்றும் சுற்றுச் சூழல் துறைகளுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஹில்மி அப்துல்லா (Hilmi Abdullah) அதனை உறுதிபடுத்தினார்.
அதோடு, நடந்த தவற்றுக்காக ஊராட்சி மன்றத்திடமும் மாநில அரசிடமும் ஏற்பாட்டாளர் சார்பில் மன்னிப்புக் கோரும் கடிதமும் வழங்கப்பட்டது.
வரும் ஜனவரி 1 முதல் அபராதத் தொகை 50,000 ரிங்கிட்டுக்கு உயரவிருப்பதையும் ஹில்மி நினைவுறுத்தினார்.
அவ்விருந்து நிகழ்வில் உள்ளூரைச் சேர்ந்த முஸ்லீம்கள் சிலரும் பங்கேற்றிருந்த நிலையில், கவர்ச்சி நடனம் சர்ச்சையை ஏப்படுத்தியிருந்தது.