
கோத்தா பாரு, செப்டம்பர்-17,
தாய்லாந்து செல்லும் பொது மக்கள் கிளந்தானில் சட்டவிரோத வழிகளை பயன்படுத்த வேண்டாம் என்று போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சட்டவிரோத வழிகளை பயன்படுத்துவோர், குடிநுழைவுச் சட்டத்தின் கீழ், அதிகபட்சம் 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்படுவார்கள் என மாநில போலீஸ் தலைவர் யூசோஃப் மாமாட் தெரிவித்தார்.
ரந்தாவ் பாஞ்சாங், பெங்காலான் கூபோர் மற்றும் புக்கிட் பூங்கா எல்லைப்பகுதிகளில், மலேசிய தின விடுமுறையால் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது.
இதையடுத்து, பயணிகள் பாதுகாப்பும், போக்குவரத்து சீருடனும் நடைபெற போலீசார் எல்லைச்சாவடிகளை கண்காணித்து வருவதாகவும் அவர் சொன்னார்.
இவ்வேளையில்,
மலேசிய தின நீண்ட விடுமுறை காரணமாக தாய்லாந்திலிருந்து திரும்பிய நூற்றுக்கணக்கான மலேசிய சுற்றுப் பயணிகள் கடுமையான சிரமத்தை சந்தித்தனர்.
நேற்று முன்தினம் Sadao – Bukit Kayu Hitam எல்லைப்பகுதியில் 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு வாகன நெரிசல் ஏற்பட்டது.
இது சுமார் 12 மணி நேரம் நீடித்து, அந்த எல்லைப் பகுதியில் இதுவரை ஏற்பட்ட மிகக் கடுமையான நெரிசலாக பதிவானது.
சுமார் 500 க்கும் மேற்பட்ட வாகனங்கள், இரவு 11 மணிக்கு எல்லை மூடுவதற்கு முன் பரிசோதனையை நிறைவு செய்ய முடியாமல், தாய்லாந்துக்குள் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
பலர் Sadao நகரிலேயே ஹோட்டல் தேடி தங்கி விட, சிலர் காரிலேயே இரவு முழுவதும் தங்கி, மறுநாள் காலை எல்லை திறக்கப்படும் வரை காத்திருந்தனர்.
மலேசிய தின விடுமுறை மற்றும் பள்ளி விடுமுறை ஒரே நேரத்தில் வந்ததால், ஆயிரக்கணக்கான மக்கள் Hatyai Danok போன்ற பிரபல இடங்களுக்கு சென்றுத் திரும்பியதே இந்நெரிசலுக்குக் காரணமாகும்.