
புத்ரா ஜெயா, ஜன 6 – நடப்பு தவணை முடிவடையும்வரை பக்காத்தான் ஹரப்பான் ஒற்றுமை அரசாங்கத்தில் தேசிய முன்னணி தொடர்ந்து இருக்கும் என அம்னோவின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்திருக்கிறார். 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒற்றுமை அரசாங்கம் அமைப்பதற்கு முன்பு
பக்காத்தான் ஹரப்பானுடன் ஒத்துழைப்பு செய்து கொண்டது முதல் இதுவே கட்சியின் உறுதியான நிலைப்பாடாக இருந்து வருவதாக துணைப்பிரதமருமான ஸாஹிட் கூறினார். கடந்த சனிக்கிழமை அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டாக்டர் முகமட் அக்மால் சாலேவின் ( Muhamad Akmal Saleh ) ஆலோசனையைத் தொடர்ந்து, நேற்று நடந்த அம்னோ அரசியல் விவகாரப் பிரிவின் கூட்டத்தின்போது இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டது. இளைஞர் பிரிவின் திட்டம் குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் ஸாஹிட் விளக்கம் அளித்தார்.
தாம் தொடக்கத்திலிருந்தே இந்த இந்த நிலைப்பாட்டில் இருந்து வருவதால் தற்போதைய அரசாங்கத்துடன் நாங்கள் ஒருபோதும் ‘அணிகளை முறித்துக் கொள்ள மாட்டோம். நடப்பு அரசாங்கத்தின் பதவிக்காலம் முடியும் வரை ஒற்றுமை அரசாங்கத்தின் ஒரு பகுதியாக நாங்கள் தொடர்ந்து இருப்போம் என்பதை தொடக்கத்திலேயே கட்சி கூறியதையும் அவர் சுட்டிக்காட்டினார். நடப்பு அரசாங்கத்தின் தவணை16 ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னர் முடியும். எனவே இந்த நிலையில் எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் கடந்த கால தவறுகளை அம்னோ மீண்டும் செய்யாது என்றும் ஸாஹிட் கூறினார்.



