
கோத்தா கினபாலு, அக்டோபர் 16 –
17 வது சபா மாநில சட்டமன்றத் தேர்தல் (PRN), நவம்பர் 29 ஆம் தேதியன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் (SPR) அறிவித்துள்ளது.
வேட்புமனு தாக்கல் நாள் நவம்பர் 15 ஆம் தேதியன்று நடைபெறுமென்றும், முன்னதாகவே வாக்களிப்பவர்கள் நவம்பர் 25 ஆம் தேதி வாக்களிக்கலாம் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிரச்சார காலம் நவம்பர் 15 முதல் 28 ஆம் தேதி வரை அதாவது 14 நாட்கள் நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
தேர்தலை நடத்த 25 தேர்தல் மேலாளர்கள், 196 உதவி மேலாளர்கள் மற்றும் 86 பிரச்சாரக் கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மொத்தம் 33,002 தேர்தல் பணியாளர்கள் பணியாற்றவுள்ளனர்.
1,784,843 பேர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில் அதில் 1.76 மில்லியன் சாதாரண வாக்காளர்கள் எனவும், 11,697 இராணுவத்தினர், மற்றும் 12,729 போலீஸ் உறுப்பினர்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
மொத்தம் 940 வாக்கு மையங்கள் மற்றும் 3,645 வாக்குப்பதிவு சேனல்கள் பயன்படுத்தப்படும் நிலையில் தேர்தல் செலவுகள் சுமார் 116.8 மில்லியனை எட்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 6 ஆம் தேதியன்று முதல்வர் டத்தோ ஸ்ரீ ஹஜிஜி நூர் (Datuk Seri Hajiji Noor) சட்டமன்றத்தை கலைத்ததைத் தொடர்ந்து, சபா 17வது மாநிலத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகியுள்ளது.