புத்ராஜெயா, ஜனவரி-14, நாட்டின் வளர்ச்சியில் இந்தியர்கள் உட்பட எந்தவொரு சமூகமும் விடுபடாமல் இருப்பதை அரசாங்கம் உறுதிச் செய்யும்.
அதற்காக தொடர்ந்து கடினமாக உழைப்போம் என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
இந்தியர்களிடையே நிலவும் வறுமை அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருக்குமென்றார் அவர்.
நாட்டில் ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் தாம் பெரிதும் நம்புவதாக, தமது சமூக ஊடகங்களில் மலாயிலும் தமிழிலும் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் அவர் சொன்னார்.
இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணமாக தமிழர்கள் அனைவரும் பொங்கல் திருநாளை விமரிசையாகக் கொண்டாடுகின்றனர்.
தமிழ் நாள்காட்டியின்படி (திருவள்ளுவர் ஆண்டு) தை மாதத்தின் தொடக்கமாக இந்தப் பொங்கல் விழா வரவேற்கப்படுகின்றது.
எனவே, இந்த ஆண்டு பொங்கல் விழாவைக் குடும்பத்தினருடனும் அன்புக்குரியவர்களுடனும் மிகவும் மகிழ்ச்சியாகவும் அர்த்தமுள்ளதாகவும் அனைவரும் கொண்டாட வேண்டும்.
மலேசியக் குடும்பத்தின் சார்பாக, தமிழ் சமூகத்தினர் உள்ளிட்ட அனைத்து இந்திய சமூகத்தினருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டினையும், பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளையும் டத்தோ ஸ்ரீ அன்வார் தெரிவித்துக் கொண்டார்.