Latestமலேசியா

நான்காவது உலக மனநல கருத்தரங்கம்; 115 பேர் பங்கேற்பு

கோலாலம்பூர், செப்-15 – மன அழுத்தம், மனச்சோர்வு உள்ளிட்ட மனநல சவால்களை நேர்மறையான அணுகுமுறையுடன் எதிர்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், நான்காவது உலக மனநல கருத்தரங்கம் TAR UMT பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

Kelab MINDA Malaysia ஏற்பாடு செய்திருந்த இக்கருத்தரங்கத்தில் மாணவர்கள், பொதுமக்கள் என 115 பேர் கலந்துகொண்டனர். மனநல சவால்களை எதிர்கொள்ளும்போது பிரச்சினைகளில் மட்டுமே கவனம் செலுத்தாமல், அதற்கான தீர்வுகளை நோக்கிச் சிந்தனையை மாற்றுவது குறித்து நிகழ்ச்சியில் முக்கியமாகப் பகிரப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக, மனநலத்தை மேம்படுத்த உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இலவச ‘RESET’ செயலியும் பங்கேற்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

2018ஆம் ஆண்டு நெகிரி செம்பிலானில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் செயலி, தற்போது 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருவதுடன், 50,000-க்கும் அதிகமான பதிவிறக்கங்களையும் கடந்துள்ளது.

ஒருவர் எதிர்கொள்ளும் பிரச்சினையைப் பற்றியே தொடர்ந்து சிந்திப்பதற்குப் பதிலாக, அதற்கான தீர்வை நோக்கி அவர்களின் கவனத்தைத் திருப்புவதே RESET செயலியின் முக்கிய அணுகுமுறை என The LOA Centre-இன் இயக்குநரும் Kelab MINDA Malaysia-வின் தலைவருமான திருமலர்தேவி தனபால் தெரிவித்தார்.

பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சின் வழிகாட்டுதலுடன் RESET செயலி தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட நிலையில், இதனை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் முயற்சியாக 2023ஆம் ஆண்டு Kelab MINDA Malaysia அமைக்கப்பட்டது.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக RESET செயலி வடிவமைக்கப்பட்டிருந்தாலும், பெற்றோரின் வழிகாட்டுதலுடன் 18 வயதுக்குட்பட்ட மாணவர்களும் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.

RESET செயலி எவ்வாறு செயல்படுகிறது, அதன் சிறப்பம்சங்கள் என்ன, பயனர்களின் சிந்தனை அணுகுமுறையில் அது எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து The LOA Centre-இன் தலைமை பரிசோதனை அதிகாரி சிவபிரகாசம் ஆறுமுகம் விளக்கமளித்தார்.

கொவிட் காலக்கட்டத்தில் இணையம் வழியாகத் தொடங்கப்பட்ட உலக மனநல கருத்தரங்கம், தற்போது நான்காவது முறையாக நடத்தப்பட்டுள்ளது. TAR UMT வளாகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறுவது இது இரண்டாவது முறையாகும்.

இதனிடையே, கருத்தரங்கில் கலந்துகொண்டவர்களிடம் வணக்கம் மலேசியா பேசியபோது, மன அழுத்தம் மற்றும் சவால்களை அணுகும் விதம் குறித்து நிகழ்ச்சி புதிய புரிதலையும் பயனுள்ள அனுபவத்தையும் வழங்கியதாக அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.

மனநலம் குறித்து வெளிப்படையாகப் பேசுவதுடன், அதனை முறையாகக் கையாள்வதற்கான நடைமுறை அணுகுமுறைகளையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் தளமாக இக்கருத்தரங்கம் அமைந்தது.

நிகழ்ச்சிக்குத் துணைநின்ற TAR UMT, சமூகத்தினர் மற்றும் வணக்கம் மலேசியாவுக்கு ஏற்பாட்டுக் குழுவினர் தங்களது நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!