
அலோர் ஸ்டார், செப்-15-கடந்த மாதம் சக நாட்டவர் ஒருவரைக் கடத்தி, சட்டவிரோதமாகச் சிறை வைத்ததாக நான்கு சீன நாட்டவர்கள் மீது இன்று அலோர் ஸ்டார் Sesyen நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
39 வயது Huang Jian, 33 வயது Wang Hao Yu, 24 வயது Guan Siqi, 46 வயது Liu Tingjun ஆகியோர் 33 வயது Xiong Xi Qiau என்பவரை கடத்தியதாகக் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது. அவர்கள் ஆகஸ்ட் 7ஆம் தேதி இரவு 8.40 மணியளவில், Langgar, Taman Amiraவில் உள்ள ஒரு வீட்டில் அக்குற்றத்தைப் புரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
குற்றவியல் சட்டத்தின் 365ஆவது பிரிவு, அதே சட்டத்தின் 34ஆவது பிரிவு ஆகியவற்றின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
எனினும் நால்வரும் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர். அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் நாட்டை விட்டு தப்பிச் செல்லக்கூடும் என அரசுத் தரப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, நீதிமன்றம் நால்வருக்கும் ஜாமீன் வழங்க மறுத்தது. அவ்வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கடத்தல் மற்றும் பிணைப் பணம் கோரும் கும்பலால் கடத்தப்பட்ட நான்கு வெளிநாட்டவர்களை காவல் துறை மீட்டதாக முன்னதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. மீட்கப்பட்டவர்களில் 72 வயது சிங்கப்பூர் ஆடவரும், 33 வயது சீனப் பெண்ணும் அடங்குவர். ஆகஸ்ட் 7ஆம் தேதி Taman Amiraவில் காவல் துறைக்கும் சந்தேக நபர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.



