
செப்பாங், நவ 1 – KLIA அனைத்துலக விமான நிலையத்தின் ஏரோடிரெய்ன் ( Aerotrain ) சேவை நாளை நவம்பர் 15ஆம்தேதி தொடங்கி இரவு 9 மணி முதல் காலை 7 மணிவரை ஒட்டுமொத்த சோதனை, பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக நிறுத்தப்படும்.
மலேசிய விமான நிலையங்களின் குறைபாடுகளை நீக்குவதற்கான விரிவான செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக , போக்குவரத்து அமைச்சின் இணக்கத்துடன் , தரை பொதுப் போக்குவரத்து நிறுவனத்தின் உறுதிப்படுத்தலுடன் ரயில் முறையின் சீரான இயக்கம் மற்றும் நீடிப்பை உறுதி செய்வதற்கும், எதிர்காலத்தில் ஏற்படும் செயல்பாட்டு இடையூறுகளைத் தவிர்ப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
KLIA போன்ற அனைத்துலக விமான நுழைவாயில்களில் ஏரோடிரெய்ன் நம்பகமானதாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்வதோடு முந்தைய இடையூறுகளின் மூல காரணங்களை முறையாக நிவர்த்தி செய்ய இந்த நடவடிக்கை அனுமதிக்கிறது.
அதே நேரத்தில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சிறந்த சேவைக்கான கடப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மலேசிய விமான நிலையங்களின் நிர்வாக இயக்குநர் டத்தோ முகமட் இசானி கானி (Mohd Izani Ghani) விளக்கினார்.
மூன்று செயல் நடவடிக்கையாக அமையும் இந்த திட்டம் டிசம்பர் 15ஆம்தேதி பூர்த்தியடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
முனையங்களை மாற்ற வேண்டிய தேவையைக் குறைக்க, பிரதான முனையத்தில் அதிக விமானப் புறப்பாடுகள் மற்றும் வருகைகள் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.



