
நியூ யோர்க் – ஆகஸ்ட்-23 – அமெரிக்க -கனடிய எல்லையில் உலகப் புகழ்பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சியை சுற்றிப் பார்த்து விட்டு, நியூ யோர்க் திரும்பும் வழியில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில், இந்தியப் பிரஜை உள்ளிட்ட ஐவர் கொல்லப்பட்டனர்.
எஞ்சிய நால்வர் அமெரிக்கா, சீனா, மத்தியக் கிழக்கு மற்றும் பிலிப்பின்ஸ் நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
ஓட்டுநர் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் பேருந்திலிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். கை கால் எலும்பு முறிவு தொடங்கி தலையில் அதிர்வு ஏற்பட்டது வரை அவர்களின் காயங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
54 பேரை ஏற்றிக் கொண்டு வேகமாகச் சென்ற அப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலை ஓரமாக குடை சாய்ந்தது.
வேறெந்த வாகனமும் இதில் சம்பந்தப்படவில்லை. பேருந்தில் தொழில்நுட்பக் கோளாறுகள் இருந்திருக்கக் கூடிய சாத்தியத்தையோ, ஓட்டுநரின் உடல் நலக்குறைவையோ மறுத்த போலீஸ், பேருந்தை வேகமாக ஓட்டிச் சென்றதே காரணம் என சந்தேகிக்கிறது.