
கோலாலம்பூர் – ஜூலை-25 – நாட்டில் பாதுகாப்புக் குற்றங்களுக்கான சிறப்புச் சட்டமான SOSMA-வின் கீழ் வழக்குகளை விசாரிக்க, சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும்.
ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் அவ்வாறு பரிந்துரைத்துள்ளார். நீண்ட காலமாக பல SOSMA வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அவற்றை விரைந்து விசாரிக்க இந்த சிறப்பு நீதிமன்றங்கள் உதவும் என்றார் அவர்.
மக்களவையில், மலேசிய மனித உரிமை ஆணையமான SUHAKAM-மின் 2023-ஆம் ஆண்டறிக்கை மற்றும் நிதியறிக்கை தொடர்பான விவாதத்தில் பேசிய போது, ராயர் அவ்வாறு சொன்னார்.
இவ்வேளையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட SOSMA கைதிகளுக்கு ஜாமீன் வழங்குவது பற்றியும் அதிகாரத் தரப்பு பரீசிலிக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
மற்றொரு நிலவரத்தில் முன்பு DAP-யில் இருந்த போது SOSMA சட்டத்தை கடுமையாக எதிர்த்த பேராசிரியர் Dr பி.ராமசாமி, அச்சட்டத்திற்கு ஆதரவாக இருக்கும் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் தான் ஸ்ரீ முஹிடின் யாசினுடன் இப்போது கை கோர்த்திருப்பது குறித்தும் ராயர் சாடினார்.
2019-ல் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியின் போது முஹிடின் உள்துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது LTTE எனப்படும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி DAP தொண்டர்கள் உட்பட சிலர் கைதுச் செய்யப்பட்டனர். புக்கிட் அமான் சிறப்புப் பிரிவின் பரிந்துரையின் பேரில் அக்கைது மேற்கொள்ளப்பட்டதாக, மேற்கொண்டு எந்த ஆதாரங்களையும் முன்வைக்காமல் கைவிரித்தவர் முஹிடின்.
அப்போது முஹிடினை ‘வெளுத்து வாங்கியவர்’ தான் இந்த ராமசாமி; இன்று உரிமைக் கட்சியின் தலைவராக இருக்கும் ராமசாமி அதே முஹிடினுடன் கை கோர்ப்பதும், சனிக்கிழமை ‘Turun Anwar’ பேரணிக்கு ஆதரவாக பேசுவதும் வேடிக்கையாக உள்ளது என ராயர் தமதுரையில் பேசினார்.