
சுபாங் ஜெயா, ஜூலை 7 – நீதிபதிகள் நியமனம் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அரச விசாரணை ஆணையம் (Suruhanjaya Siasatan Diraja) அமைக்கப்பட வேண்டும் என்று மூத்த பிகேஆர் (PKR) கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீதிபதி பதவி தொடர்பான பரிந்துரைகள், நீதித்துறை நியமன ஆணையத்தால் (Suruhanjaya Pelantikan Kehakiman) முந்தைய அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டதாகவும், ஆனால் உரிய நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை என்று பிகேஆர் முன்னாள் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ரஃபிசி ரம்லி கூறியுள்ளார்.
முன்னறிவிப்புகள் ஏதும் இன்றி, காலியாக உள்ள பதவிகளுக்கு மீண்டும் பரிந்துரைகளை வழங்கும் நோக்கில் கடந்த வெள்ளிக்கிழமை நீதித்துறை நியமன ஆணையம் சந்திப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்திருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மத்திய அரசிடமிருந்து விளக்கம் தேவை என்றும், சம்பந்தப்பட்ட தரப்பினர்களால் சரியான முடிவு எடுக்கப்பட வேண்டுமென்றும் PKR உறுப்பினர்கள் எதிர்பார்ப்பதாக ரஃபிசி குறிப்பிட்டுள்ளார்.