
கோலாலம்பூர், ஜனவரி 9 — கடந்த மாதம் நடந்த தற்காலிக வெடிகுண்டு (IED) சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 63 வயது நபர் தன் மீது சுமத்தப்பட்ட 5 குற்றச்சாட்டுகளையும் இன்று நீதிபதியின் முன்னிலையில் மறுத்துள்ளார்.
அந்த ஆடவர் சிரம்பான் மருத்துவமனை படுக்கையில் இருந்தபோது குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன. விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, அவருக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் வழக்கு சற்று நேரம் ஒத்திவைக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் தொடரப்பட்டது.
குற்றச்சாட்டின்படி, டிசம்பர் 22 ஆம் தேதி நீலாய், டெசா பால்மா குடியிருப்பில், 47 வயது நபருக்குச் சொந்தமான MitsubishiTriton வாகனத்தை வெடிபொருளைப் பயன்படுத்தி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இக்குற்றத்திற்கு 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், வெடிபொருட்களை காயப்படுத்தும் நோக்குடன் வைத்திருந்ததாகவும், IED-ஐ சட்டவிரோதமாக பயன்படுத்தியதாகவும் அவர் மீது கூடுதல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இக்குற்றங்களுக்கு சிறை மற்றும் பிரம்படி தண்டனையும் விதிக்கப்படும் என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில் நீதிமன்றம் சந்தேக நபருக்கு ஜாமீன் மறுத்து, வழக்கை பிப்ரவரி 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.



