
ச்சுக்காய், மார்ச்-17 – திரங்கானு, கெமாமானைச் சேர்ந்த இல்லத்தரசி ஒருவர், இல்லாத ஒரு வேலை வாய்ப்பை நம்பி 50,000 ரிங்கிட்டுக்கும் மேல் மோசம் போயுள்ளார்.
47 வயது அம்மாது, மார்ச் 3-ஆம் தேதி Instagram-மில் பார்த்த பகுதி நேர வேலை வாய்ப்பு விளம்பரத்தால் கவரப்பட்டார்.
பின்னர் வாட்சப் மூலமாக பெண்ணொருவர் அறிமுகமாகி, ‘வேலை’ குறித்த மேல் தகவல்கள் பறிமாறப்பட்டன.
ஹோட்டல் முன்பதிவுகளுக்கு இணையம் வாயிலாக வெவ்வேறு கட்டணங்களைச் செலுத்த வேண்டுமென்பதே அந்த பகுதி நேர வேலையாம்.
சொன்னபடி செய்து முடித்தால் 4 முதல் 10 விழுக்காடு வரை கமிஷன் கிடைக்குமென இல்லத்தரசியிடம் ஆசை வார்த்தைக் கூறப்பட்டது.
அவரும் அதை அப்படியே நம்பி, மார்ச் 5 முதல் 14 வரை 24 தடவையாக மொத்தம் 50,500 ரிங்கிட்டை, கொடுக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார்.
எனினும் சொல்லியபடி கமிஷன் தொகை எதுவும் கைக்கு வரவில்லை; அதன் பிறகே தான் மோசடிக்கு ஆளானதை உணர்ந்து போலீஸில் அவர் புகார் செய்தார்.