
பேங்கோக், செப்டம்பர்-27,
தாய்லாந்தில் நிகழ்ந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில் 60 வயது நெதர்லாந்து நாட்டு ஆடவர், தனது பிக்கப் லாரியைப் பயன்படுத்தி ATM இயந்திரத்தையே இழுத்துச் சென்று திருட முயன்றபோது போலீசிடம் சிக்கினார்.
சந்தேக நபர், தனது தாய்லாந்து மனைவியுடன் உணவகம் நடத்த 10 மில்லியன் பாத் (Baht) முதலீடு செய்திருந்தார்.
ஆனால் தொடர்ந்து ஏற்பட்ட நிதி சிக்கலால் தம்பதியருக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டது.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு, நண்பரைச் சந்திக்கப் போகிறேன் என்று கூறி வீட்டை விட்டு சென்ற அவ்வாடவர், நகரில் உள்ள ATM ஒன்றைத் திருட முயன்றார்.
எனினும் போலீஸார் துரிதமாகச் சம்பவ இடத்துக்கு சென்று, பிக்கப் லாரியின் பின்புறத்தில் சங்கிலியால் கட்டப்பட்ட ATM இயந்திரத்தை, அசல் இடத்திலிருந்து சுமார் 20 மீட்டர் தூரத்தில் கண்டுபிடித்தனர்.
கைதானவர் மீது ஏற்கனவே திருட்டு, சொத்து சேதம் போன்ற குற்றச்சாட்டுகள் இருந்ததும் கண்டறியப்பட்டது.
நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கும், வேறு சில கூடுதல் தண்டனைகளுக்கும் ஆளாகலாம்.