
சிரம்பான், மே 22 -385 மாணவர்கள் பயிலும் பண்டார் ஸ்பிரிங்ஹில் (Bandar Springhill) தமிழ்ப்பள்ளியில் பல நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு கடந்த 2 ஆண்டுகளாக திறந்த வெளி மண்டபம் கட்ட வேண்டும் என்ற முயற்சி நிறைவேறும் வகையில் இன்று அந்த மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

750,000 ரிங்கிட் செலவில் நிர்மாணிக்கப்படவிருக்கும் இந்த திறந்த வெளி மண்டபத்திற்கான கட்டுமான பணி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திறந்த வெளி மண்டபம் கட்டுவதற்கான முதல் நிதியாக கடந்த ஆண்டு இறுதியில் போக்குவரத்து அமைச்சரும் சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினருமான அந்தோனி லோக் மூலம் YTL நிறுவனத்திடமிருந்து 450,000 ரிங்கிட்டும், நெகிரி செம்பிலான் மந்திரிபெசாரிடமிருந்து 30,000 ரிங்கிட்டும் பெறப்பட்டதாக அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்ட நெகிரி செம்பிலான் ஆட்சிக் குழு உறுப்பினர் அருள்குமார் ஜம்புநாதன் தெரிவித்தார்.

தேவைப்படும் நிதியை நம் சமூகத்தைச் சேர்ந்த மேலும் சில நல்ல உள்ளங்களிடமிருந்து பெறமுடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து நிதி உதவிகள் மாநில அரசாங்கத்திடமிருந்து பெற்றுத்தர முயற்சிகள் எடுக்கப்படும்.
இந்த மண்டபம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் அதனை வாடகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கப்பெறும் நிதியின் மூலம் பண்டார் ஸ்பிரிங்ஹில் தமிழ்ப்பள்ளிக்கும் அதன் மாணவர்களுக்கும் பயனுள்ள மற்ற திட்டங்களையும் வெற்றிகரமாக அமல்படுத்த முடியும் என அருள்குமார் கூறினார்.
பண்டார் ஸ்பிரிங்ஹில் தமிழ்ப்பள்ளிக்கு புதிய தோற்றத்தையும் உத்தேச திறந்த வெளி மண்டபம் பெற்றுத் தரும் என்பதோடு இதன்வழி அப்பள்ளியில் இணையும் மாணவர்களின் எண்ணிக்கையையும் மேலும் அதிகரிக்க முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.




