Latestமலேசியா

பத்து பஹாட்டில் மாடுகளை நகர்த்தச் சென்ற இடத்தில் முதலை; அதிர்ச்சியில் விவசாயி

பத்து பஹாட், பிப்ரவரி 26-நேற்று காலை கம்பூங் பெடடா குனிங் (Kampung Pedada Kuning) பகுதியில் மாடுகளை அழைத்து வர சென்ற விவசாயி ஒருவர், கிராமச் சாலையருகில் முதலை ஒன்று கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

59 வயதுடைய அந்த மாட்டுப் பண்ணையாளர் முதலை இருப்பதை கவனித்ததும் உடனடியாக மலேசிய பாதுகாப்புப் படையான APM அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.

APM மற்றும் வனவிலங்கு, தேசியப் பூங்கா துறையான PERHILITAN அதிகாரிகள் விரைந்து வந்து சுமார் 45 நிமிடங்களில் முதலையைப் பிடித்தனர்.

சுமார் மூன்று மீட்டர் நீளமுள்ள பெண் முதலை ஆக்ரோஷமாக இருந்ததுடன், அப்பகுதியில் முட்டையிட்டு கூடு அமைத்திருந்ததாக நம்பப்படுகிறது.

அது அருகிலிருந்த கால்வாய் வழியாக தப்ப முயன்றபோதும், அதிகாரிகள் அதன் கண்களை துணியால் மூடி அமைதிப்படுத்தி பாதுகாப்பாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த முதலை சுங்கை பத்து பஹாட் ஆற்றிலிருந்து வந்து, சுமார் 500 மீட்டர் தூரத்தில் கூடு அமைத்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிடிக்கப்பட்ட முதலை மற்றும் அதன் முட்டைகள் PERHILITAN அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, சிலாங்கூர் டெங்கில் பகுதியில் உள்ள பாயா இண்டா வெட்லண்ட்ஸ் ( Paya Indah Wetlands) வனவிலங்கு பாதுகாப்பு மையத்திற்கு மாற்றப்பட உள்ளன.

சுங்கை பத்து பஹாட் அருகிலுள்ள பகுதிகளில் முதலைகள் தோன்றும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், கடந்த ஆண்டும் அருகிலுள்ள பகுதிகளில் பெரிய முதலைகள் பிடிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!