
‘பல்லில்லா புலி’: அசாம் பாக்கி மீதான விசாரணைக் குழு பயனற்றதாக மாறும் அபாயம்; ராம் கர்பால் எச்சரிக்கை
கோலாலம்பூர், பிப்ரவரி-15,
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கியின் பங்கு உரிமை தொடர்பான விசாரணைக்காக அமைக்கப்பட்ட சிறப்புப் பணிக் குழுவின் நம்பகத்தன்மை குறித்து கடும் கேள்விகள் எழுந்துள்ளன.
_’பல்லில்லாத புலி’_ போல இந்தக் குழு பயனற்றதாக முத்திரை குத்தப்படும் அபாயம் இருப்பதாக, DAP-யைச் சேர்ந்த புக்கிட் கெளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்பால் சிங் எச்சரித்துள்ளார்.
அதற்கு அவர் 4 முக்கிய காரணங்களை முன்வைத்துள்ளார்…
முதலில், குழுவுக்கு சாட்சிகளை முன்னிலையாகக் கட்டாயப்படுத்தும் அதிகாரம் இல்லை; ஆவணங்களை கேட்கும் சட்ட அதிகாரமும் இல்லை. இதனால், அசாம் பாக்கி வழங்கும் விளக்கத்தைத் தவிர வேறு தகவல்களை அவர்களால் பெற முடியாது.
இரண்டாவது, போட்டி நிறுவனங்களைக் கையகப்படுத்த வர்த்தகர்களுடன் MACC கூட்டு சேர்ந்ததாக Bloomberg கூறிய குற்றச்சாட்டுகள், விசாரணைக் குழுவின் பணிக்குறிப்பில் இடம்பெறவில்லை.
ஆனால் அவையும் மிகக் கடுமையானவை என்பதால் விசாரிக்கப்பட வேண்டும் என ராம் கர்பால் வலியுறுத்தினார்.
மூன்றாவது, AG எனப்படும் தேசிய சட்டத்துறைத் தலைவர் பணிக் குழுவின் தலைவராக இருப்பது முரண்பாட்டை ஏற்படுத்துகிறது.
விசாரணை முடிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் வழக்குத் தொடர வேண்டியவர் AG என்பதால், ஒரே நபர் விசாரிப்பவராகவும் வழக்குத் தொடருபவராகவும் இருக்க முடியாது என்பதை ராம் கர்பால் சுட்டிக் காட்டினார்.
நான்காவது, அசாம் பாக்கி விடுப்பில் செல்லவில்லை என்பதால், அவர் விசாரணையில் தலையிடவோ தாக்கம் செலுத்தவோ கூடும் என்ற பொது மக்களின் சந்தேகத்திற்கு பதில் இல்லை.
எனவே Bloomberg முன்வைத்துள்ள கடுமையான குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டு, பாகுபாடு நடப்பதாக எவ்வித கண்ணோட்டமும் ஏற்படாதவாறு, அவை வெளிப்படையாகவும் சுயேட்சையாகவும் விசாரிக்கப்பட வேண்டும் என ராம் கர்பால் வலியுறுத்தினார்.
Velocity Capital Partner Bhd நிறுவனத்தில் அசாம் பாக்கி 17.7 மில்லியன் பங்குகளை வைத்திருந்ததாக Bloomberg அம்பலப்படுத்திய நிலையில், அதனை அவர் மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.



