
கோலாலம்பூர், அக்டோபர்-6 – பள்ளிகளின் நற்பெயரைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக, அங்கு ஏற்படும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளை மறைக்கக் கூடாது என தேசிய போலீஸ் படைத் தலைவர் தான் ஸ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் வலியுறுத்தியுள்ளார்.
இதுபோன்ற சம்பவங்கள் மறைக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதற்குத் தடையாக அமையக்கூடும் என்றார் அவர்.
எனவே, பள்ளிகளில் நிகழும் அனைத்து சம்பவங்களும் மேல் நடவடிக்கைக்காக தெரிவிக்கப்படுவதை உறுதிச் செய்ய, போலீஸாருக்கும் பள்ளி நிர்வாகங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என அவர் கூறினார்.
பள்ளிகளின் பாதுகாப்பை உறுதிச் செய்வது போலீஸாரின் பொறுப்பு மட்டுமல்ல; மாறாக பள்ளி நிர்வாகம், கல்வி அமைச்சு மற்றும் பெற்றோர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் இதில் கூட்டுப் பொறுப்பு இருப்பதாக IGP சொன்னார்.
இந்நிலையில், CCTV கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில், பள்ளிகள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களுடன் போலீஸார் தொடர்ந்து கலந்துரையாடி வருவதாகவும் அவர் கூறினார்.
அதேவேளை, பள்ளிகள் மற்றும் மாணவர் விடுதிகளில் போலீஸ் ரோந்து நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஜோகூர், யெங் பெங்கில் 16 வயது மாணவி பள்ளியில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவர் கருத்துரைத்தார்.
அச்சம்பவம் தொடர்பில் சில தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், எந்தவொரு முடிவுக்கும் வருவதற்கு முன்பு முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் IGP தெரிவித்தார்.



