
கோத்தா பாரு, மார்ச்-10 – மாணவர்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் அனைத்து வகையான தின்பண்டங்களும் பள்ளி வளாகத்தில் விற்கப்படாது என கல்வி அமைச்சு உத்தரவாதமளித்துள்ளது.
வேப் வடிவில் விற்கப்படும் மிட்டாய்களும் அவற்றிலடங்கும்.
தடையை மீறி விற்றால் நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் எச்சரித்தார்.
அதே நேரம், பள்ளிகளுக்கு வெளியே இந்த வேப் வடிவிலான மிட்டாய்கள் விற்கப்படுவதற்கு, தலைமையாசிரியர்கள், ஊராட்சி மன்றங்கள் மற்றும் KKM எனப்படும் சுகாதார அமைச்சின் ஒத்துழைப்புத் தேவை என்றார் அவர்.
ஆரோக்கியக் கேட்டை விளைவிக்கும் தின்பண்டங்கள் மாணவர்களுக்கு எளிதில் கிடைக்காதிருப்பதை உறுதிச் செய்ய, KKM மற்றும் ஊராட்சி மன்றங்களுடனான கலந்தாய்வு முக்கியம் என ஃபாட்லீனா சொன்னார்.
வேப், சிகரெட் மற்றும் ஊசி வடிவிலான மிட்டாய் வகைகள் உள்நாட்டுச் சந்தைகளில் தற்போது மலிந்துகிடப்பதாக, CAP எனப்படும் பினாங்குப் பயனீட்டாளர் சங்கம் முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தது.
பல்வேறு வண்ணங்களில் சிறார்களையும் மாணவர்களையும் எளிதில் கவரும் வகையில் அம்மிட்டாய்கள் இருக்கின்றன.
அவற்றை உட்கொள்வதால் பின்னாளில் ஏற்படக்கூடிய ஆபத்துகளை மாணவர்கள் அறியாத காரணத்தால், அவ்வகை மிட்டாய்களுக்கு தடை விதிக்கப்பட வேண்டுமென CAP கேட்டுக் கொண்டிருந்தது.