
கோலாலம்பூர், மார்ச்-28-‘Protection Money’ அல்லது பாதுகாப்புப் கட்டணம் என்றப் பெயரில் வணிகத் தளமொன்றில் பணம் கோரிய வீடியோ வைரலானதை அடுத்து, கூட்டரசு பிரதேச குடியிருப்பாளர்கள் பிரதிநிதித்துவ மன்றத்தில் வகிக்கும் பதவிகளைத் துறக்குமாறு, 2 தலைவர்களுக்கு பி.கே.ஆர் கட்சி உத்தரவிட்டுள்ளது.
R. விஜேந்திரன் மற்றும் G. பார்த்தியதாசன் ஆகியோரே அவ்விருவராவர் என, கூட்டரசு பிரதேச பி.கே.ஆர் தலைமைத்துவ மன்றத் தலைவர் டத்தோ Azman Abidin கூறினார்.
வங்சா மாஜுவில் ஓர் உடம்புபிடி மையத்தில் பணத்தைக் கேட்டு மிரட்டியதாக அவ்விருவரும் புகாரை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்நிலையில், அவர்கள் மீதான போலீஸ் விசாரணையும், உட்கட்சி விசாரணையும் எந்த இடையூறும் இன்றி நடைபெற, இந்நடவடிக்கை அவசியமென Azman கூறினார்.
வங்சா மாஜு பி.கே.ஆர் தொகுதிக்கு இது தொடர்பான உத்தரவு கிடைத்திருப்பதாக அவர் சொன்னார்.
அதிகார துஷ்பிரயோகம், மிரட்டி பணம் பறிப்புப், பாதுகாப்புப் கட்டணம் என எந்த தவறான செயலையும் பி.கே.ஆர் சகித்துக் கொள்ளாது என அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
சர்ச்சைக்குள்ளான அந்த வைரல் வீடியோ குறித்துப் போலீஸ் இதுவரை 3 புகார்களைப் பெற்றுள்ளது.



