
கோலாலாம்பூர், ஜூலை-13-ஜோகூர் மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி சந்தித்த பின்னடைவு குறித்து, கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சாந்தியாகோ PH தலைமைக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
பாஸ் கட்சியை மத ரீதியான ஒரு ‘பூச்சாண்டி’யாகக் காட்டி, மலாய்க்காரர் அல்லாதோரின் ஆதரவை ஈட்டும் பழைய யுக்தி இனியும் பலனளிக்காது என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
_“அரசாட்சி, சீர்திருத்தம் மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, பயத்தைப் பயன்படுத்தி வாக்குகளைப் பெறும் காலம் முடிந்துவிட்டது”_ என்பதே சார்ல்ஸ் வைக்கும் அழுத்தமான கருத்தாகும்.
மலாய்க்காரர் அல்லாதோரின் வாக்குகள் தங்களுக்கு மட்டுமே என்ற பக்காத்தான் ஹராப்பானின் பிம்பம் இப்போது உடைந்துவிட்டதாகவும், இளைய தலைமுறை வாக்காளர்கள் பாரிசான் நேஷனல் மற்றும் பெர்சாமா போன்ற மாற்றுத் தரப்புகளை நோக்கிச் செல்வதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்தத் தேர்தல் முடிவுகளை வெறும் தோல்வியாக மட்டும் பார்க்காமல், நிறைவேற்றப்படாத சீர்திருத்தங்கள் மீதான மக்களின் அதிருப்தி என்பதை உணர்ந்து, PH கூட்டணி தனது அரசியல் பாதையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதை அலட்சியப்படுத்தினால், வரவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலிலும் இதே போன்ற மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
கூட்டணி தனது போக்கை மாற்றிக்கொள்ள இன்னும் கால அவகாசம் இருப்பதாகவும், ஆனால் அந்த வாய்ப்பு மிக வேகமாக முடிந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜோகூர் தேர்தலில் அனைத்து 56 தொகுதிகளிலும் போட்டியிட்ட பக்காத்தான், வெறும் எட்டே இடங்களில் வெற்றிப் பெற்று படுதோல்வியைச் சந்தித்துள்ளது.



