
பினாங்கில் 780 மலிவு வீடுகள்; செபராங் பிறையில் புதியத் திட்டத்தை தொடக்கி வைத்த சுந்தராஜு
செபராங் பிறை, பிப்ரவரி-13,
பினாங்கு அரசாங்கம், ‘ரூமா முத்தியாராக்கு’ (RMKu) மலிவு விலை வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 780 A இரக வீடுகள் வழங்கும் 2 முக்கிய திட்டங்களை செபராங் பிறை உத்தாராவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
வீடமைப்பு மற்றும் சுற்றுச் சூழல் துறைகளுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எஸ். சுந்தராஜு அவ்விழாவுக்குத் தலைமைத் தாங்கினார்.
இதில், 640 வீடுகள் பினாங்கு செத்தியா அபார்ட்மெண்ட் திட்டத்திலும், மேலும் 144 வீடுகள் விஸ்தா பெர்டானாவிலும் மாநில வீடமைப்பு வாரியத்தால் வாங்கப்பட்டு, மக்களுக்கு வாடகை-கொள்முதல் திட்டம் மூலம் வழங்கப்படுகின்றன.
இந்த திட்டத்தின் மூலம், மக்கள் மாதா மாதம் RM250 மட்டும் 15 ஆண்டுகள் செலுத்தி, வங்கி கடன் அல்லது முன்பணம் எதுவும் இல்லாமல், சொந்த வீட்டினைப் பெற முடியும்.
இம்முயற்சி பினாங்கு மக்களுக்கு அதிகபட்ச நன்மை அளிக்கும் என பிறை சட்டமன்ற உறுப்பினருமான சுந்தராஜு சொன்னார்.
இது Penang2030 நோக்கத்திற்கு ஏற்ப, பசுமையான, விவேகமான, குடும்ப மையப்படுத்தப்பட்ட மாநிலத்தை உருவாக்கும் முயற்சியாகும் என்றார் அவர்.
அனைவருக்கும் பாதுகாப்பான, வசதியான, மரியாதையான வீடுகளை வழங்கும் மாநில அரசின் உறுதியை இது வெளிப்படுத்துகிறது.
கெப்பாளா பாத்தாஸ் மைடின் ஹைப்பர்மார்க்கெட்டில், வாடிக்கையாளர் சந்திப்பு நாள் நிகழ்ச்சியோடு சேர்ந்து, விஸ்தா பெர்டானா அபார்ட்மெண்ட் திட்டத்தில் 144 வீடுகளை வாங்கும் ஒப்பந்தமும் கையெழுத்தானது.



