புக்கிட் பிந்தாங் Hicks அடுக்குமாடி பகுதியில் அசுத்தமான சூழல்; வைரல் வீடியோவை அடுத்து DBKL அதிரடி நடவடிக்கை

கோலாலம்பூர், ஜூலை-2 – கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங்கில் உள்ள ஜாலான் ஹிக்ஸ் (Jalan Hicks) அடுக்குமாடி குடியிருப்பின் அசுத்தமான மற்றும் சுகாதாரமற்ற சூழலை வெளிச்சம் போட்டுக் காட்டிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, கோலாலம்பூர் மாநகர மன்றமான DBKL அங்கு உடனடியாகத் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.
பொது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய அந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், DBKL அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தினர்.
தலைநகரின் முக்கிய சுற்றுலா மற்றும் வணிக மையமாக விளங்கும் புக்கிட் பிந்தாங் பகுதியின் தூய்மையையும் பொது சுகாதாரத்தையும் பேண வேண்டியதன் அவசியத்தை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட குடியிருப்பு வளாகத்தில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றி, சுகாதாரச் சீர்கேட்டை உடனடியாகச் சரி செய்ய DBKL நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் நகர அழகைப் பராமரிக்க இதுபோன்ற தீவிரக் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் DBKL எச்சரித்துள்ளது.



